‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை

வருமான வரித் துறையினரின் பிடியில், சசிகலா சிக்குகிறார். இத்துறையின் அதிரடியில்
சிக்கிய அவரின் உறவினர்கள், ‘இனிமேல் தாங்காது’ என்பது போல், ‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில்
விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சசி குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த, ஐந்து நாள் சோதனையில் அள்ளிய, 1,430 கோடி ரூபாய் ஆவணங்கள் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்!

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, ‘டிவி’ மற்றும், ‘மிடாஸ்’ மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நவ., 9 முதல் ஐந்து நாட்கள், வருமான வரி சோதனை நடந்தது. அதையடுத்து, விவேக், பூங்குன்றன், சிவகுமார், கிருஷ்ணபிரியா, அவரின் கணவர், கார்த்திகேயன், ஷகிலா, அவரின் கணவர், ராஜராஜன் உள்ளிட்டோர், வருமான வரித்துறை விசாரணைக்கு, நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இதில், முதல் கட்டமாக, 1,430 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டாத சொத்துகள்; 12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, ஏராளமான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்பு களையும், அதிகாரிகள் அள்ளி வந்துள்ளனர். அவற்றை அலசி ஆராய்ந்த திலும், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்தும், இந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.சசி கும்பல் சேர்த்த பணத்தை,

அவரது சகோதரர், திவாகரன், பல மட்டங்களில் முதலீடு செய்து உள்ளது, விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற விசாரணையில், சசிகலாவை தான் கை காட்டி உள்ளனர். ‘ஒட்டுமொத்த குடும்பத்தினரின் அனைத்து வித வருவாய்க்கும், சொத்து குவிப்புக்கும் மூலக்காரணம், அவர் தான்’ என, விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.