Go to ...
Canada Uthayan Tamil Weekly
இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை    * அயோத்தியில் 1990-ல் கரசேவர்கள் மீது துப்பாக்கி சூடு, முலாயம் சிங்கை கைது செய்ய வேண்டும் விஎச்பி    * டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சந்திப்பு    * இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ இந்தியாவில் ஜனவரி 14 முதல் 4 நாள் சுற்று பயணம்    * வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை சீனா துண்டித்தது
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Thursday, November 23, 2017

போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி


மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது.

அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம் தான் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு சொந்தமான பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக ரூ.1549.60 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்கள் ரூ.580.63 கோடிக்கும், மதுரைக் கோட்டத்தின் சொத்துக்கள் ரூ.363 கோடிக்கும் அடகு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மீதமுள்ள 5 அரசுப் போக்குவரத்துக்கழகக் கோட்டங்களின் பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள், தளவாடங்கள் ஆகியவையும் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்படி வழங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதித்து வருகின்றனர்.

அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.11,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலுத்தப்படாமல் இருக்கும் தொகை, 6 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.6400 கோடி என்று கூறப்படுகிறது. இவை தவிர வேறு வழிகளில் பெறப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்தால் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமையை ரூ.20,000 கோடியைத் தாண்டும்.

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் அவற்றின் சொத்துக்களை அடகு வைக்கும் அவலம் தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குதல் உள்ளிட்ட செலவுக்காக பேருந்துகளை அடகு வைப்பதும், அடுத்த சில மாதங்களில் அவை மீட்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆனால், கடந்த 2006&ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளுக்காக அவற்றின் பணிமனைகள் அமைந்துள்ள நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அடமானம் செய்யப்பட்ட சொத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் மீட்கப்பட்டதே இல்லை. மாறாக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துவிட்டதாகக் கணக்குக் காட்டி, கூடுதல் கடன் பெறுவது தான் வழக்கமாகி வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் அந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு அவற்றில் நடக்கும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் ஆகும். பேருந்துகள், உதிரிபாகங்களை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்கள், ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை செய்யாமல் ஊதியம் வழங்குவது, அதிக வசூல் கிடைக்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துககளுக்கு சாதகமாக அரசுப் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது போன்றவை தான் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு காரணம் ஆகும். இதுதவிர, போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு மானியங்களை தமிழக அரசு வழங்காததால் இழப்பும், சீரழிவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களின் கடன்சுமை குறைந்தபட்சம் ரூ.20,000 கோடியைத் தாண்டி விட்ட நிலையில், அதற்கான வட்டி சுமையே ஆண்டுக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். மேலும் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களின் கடன்கள் அடைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும்.

அத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, கழகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தான் தமிழகத்தின் திராவிட ஆட்சியாளர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்து என்பதே ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2