பொய் சொல்ல மாட்டேன்: ராகுல் பேச்சு

அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திப்ருகார்க் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: அசாம் தேயிலை தொழிலாளர்களுக்கு, சம்பளமாக 351 ரூபாய் தருவதாக பா.ஜ., உறுதி அளித்தது. ஆனால், 167 ரூபாய் மட்டும் தான் அளிக்கிறது. நான் மோடி அல்ல. நான் பொய் சொல்ல மாட்டேன். இன்று, நாங்கள் உங்களுக்கு 5 உறுதிமொழி அளிக்கிறோம்.
*தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம்.
*குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
*5 லட்சம் வேலைவாய்ப்புகள்.
*200 யூனிட் இலவச மின்சாரம்
*குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவோம்.

தேயிலை தொழிற்சாலைக்கு, நாங்கள் சிறப்பு அமைச்சகம் அமைத்து, உங்களின் பிரச்னைகளை தீர்ப்போம். தேயிலை தொழிலாளர்களுடன் ஆலோசித்து, தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். பூட்டிய அறைகளுக்குள் தயாரிக்கவில்லை.

மேட் இன் இந்தியா குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், மொபைல்போன், சட்டைகளை பார்த்தால், அதில், மேட் இன் சீனா என இருக்கும். அதில், மேட் இந்தியா, மேட் இன் அசாம் என இருக்காது. ஆனால், மேட் இன் இந்தியா, அசாம் என இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இதனை பா.ஜ., செய்யாது. அவர்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமே உழைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.