பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் சொன்ன தவறான பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., எம்.பி., மீனாட்சி லெக்வி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ரபேல் வழக்கில் கூடுதல் ஆவணங்களை ஏற்று விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ராகுல் சுப்ரீம்கோர்ட்டே, காவலாளி மோடி திருடன் என்று சொல்லி விட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்; உணர்ச்சிப்பூர்வமாக தவறுதலாக கூறி விட்டதாகவும், இதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் மீண்டும் ஒரு நோட்டீசை அனுப்பினர். இதனையடுத்து மீண்டும் ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது.

இதில் நீதிபதிகள்; ராகுல் சொல்வது போல் நாங்கள் எந்த இடத்தில் சொன்னோம் ? ராகுல் வருத்தம் தெரிவிப்பதாக அடைக்குறிப்புக்குள் கூறியுள்ளார். எல்லோரும் தவறு செய்வார்கள், ஆனால் அதனை வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டும். ஏன் அவர் நேரிடையாக மன்னிப்பு கோரவில்லை ?
இதனையடுத்து ராகுல் வக்கீல் தரப்பில் கோர்ட்டில் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவித்தார். மேலும், நீதிபதிகள் சொல்லாததை தவறுதலாக சொல்லி விட்டோம் என்றும் அவர் ஒத்து கொண்டார்.

இதனையடுத்து வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கோர்ட் ராகுலின் விளக்கத்தை ஏற்குமா , ஏற்காதா என்பது அடுத்த விசாரணையில் தெரிய வரும்.

விசாரணைக்கு பின்னர் கோர்ட்டுக்கு வெளியே ராகுலின் வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில்: கோர்ட்டில் மன்னிப்பு கோரியது உண்மைதான், ராகுலின் கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை, கோர்ட்டை அவமதிக்கும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது என்று தெரிவித்தோம் என்றார்.