பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது.

பொன் மாணிக்கவேல்,பணி நீட்டிப்பு,தடை விதிக்க,சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்த தனிப்பிரிவு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும் அரசாணைக்கு தடை விதித்தது. மேலும், ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக, அவருக்கு ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. விசாரணை, அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.