பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை

2017ம் ஆண்டு நிகழ்ந்த பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும் ராஜஸ்தான் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

விப்பின் யாதவ், ரவீந்திர குமார், காலு ராம், தயானந்த், யோகேஷ் குமார், பீம்ராட்டி ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஹரியானாவின் நூர்க்-ஐ சேர்ந்த பெஹ்லு கானை, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் கும்பல் ஒன்று தாக்கியது. பசுக்களை ஏற்றிக்கொண்டு ஜெய்பூரில் இருந்து அவரது கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டபோதே, இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

இந்த தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர், 55 வயதான பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

“பசு பாதுகாப்பாளர்கள்“ என்று கூறப்படுவோரால் அவரது மகன்களும், பிறரும் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பெஹ்லு கான் இறந்த பின்னர், காவல் துறை ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது. மேலும், பெஹ்லு கானோடு இருந்தவர்கள் மீது பசு கடத்தல் வழக்கு பதியப்பட்டது.

வாகன ஓட்டுநர் அர்ஜூன் யாதவ் மற்றும் அந்த வாகனத்தின் உரிமையாளர் ஜகதீஷ் மீது பசு கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது.

“நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்ததாகவும், ஆனால் நீதி மறுக்கப்பட்டுவிட்டது என்றும் பெஹ்லு கானின் மகன் இர்ஷாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.