பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார்.

அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார்.

இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற நாடுகள் இலங்கையை வலியுறுத்தின. மேலும் ஐ.நா. பொதுச்செயலாளரும் சிறிசேனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 7-ந்தேதி (நாளை) நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. எனினும் அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சூழலில் வருகிற 14-ந்தேதி நாடாளுமன்றம் கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. அங்கு விக்ரமசிங்கே தலைமையிலான அணியை சேர்ந்த எம்.பி.க்களை இழுப்பதற்கு வசதியாகவே இந்த தாமத நடவடிக்கை என கூறப்படுகிறது.

நாடாளுமன்றம் 7-ந்தேதி கூடும் என எதிர்பார்த்த நிலையில், அதை 14-ந்தேதிக்கு அதிபர் தள்ளி வைத்த நடவடிக்கை சபாநாயகருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் உரிமையை மறுப்பது சட்ட விரோதம் மட்டுமின்றி பாரம்பரிய மீறலும் ஆகும் என அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து அதிபர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என 116 எம்.பி.க்கள் தன்னிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாக தெரிவித்த கரு ஜெயசூர்யா, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கை முற்றிலும் சரியானது என்றும் கூறினார்.

இதைப்போல ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வஜிரா அபய்வர்தனா கூறுகையில், ‘இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் நாளாக 14-ந்தேதியை நாம் கருத முடியாது. ஏனெனில் எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்காகவே நாடாளுமன்றம் கூடும் தேதி தள்ளிப்போடப்பட்டு உள்ளது. எம்.பி.க்கள் விலைக்கு வாங்கும் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அதிபர் காலம் தாழ்த்துவதால் சபாநாயகரே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், அதிபரின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.

எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என நேற்று அவர் கூறினார். மேலும் தற்போதைய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரிடும் என்பதால், பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை பிரதமர் இருக்கையும் ராஜபக்சேவுக்கு வழங்கப்படாது எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 96-ல் இருந்து 105 ஆக உயர்ந்துள்ளது. விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 8 எம்.பி.க்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒரு எம்.பி. என 9 பேர் இதுவரை ராஜபக்சேவின் அணிக்கு தாவியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. எனினும் அதை அவசரமாக எடுத்துக்கொள்ள முடியாது என ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர். 225 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேவுக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னாள் ராணுவ அதிகாரியான அஜித் பிரசன்ன மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விக்ரமசிங்கேயின் கட்சி எம்.பி.க்களான பாலித்த தேவரப்பெரும, கேசவிதானகே ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

தற்போது அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. விக்ரமசிங்கேயின் பதவி நீக்கத்தை கண்டித்து ஐக்கிய தேசிய கட்சியினரும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கானோர் நேற்று தலைநகர் கொழும்புவில் பேரணி நடத்தினர். இதில் அதிபர் சிறிசேனா, ராஜபக்சே ஆகியோர் கூட்டாக பங்கேற்று தொண்டர்களை உற்சாகமூட்டினர்.