பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அழையுங்கள்: காங்., சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆளுநருக்கு கடிதம்

தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழ்நிலையில் 22 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ள சூழ்நிலையில் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “ஓபிஎஸ் எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதிருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இதே கோரிக்கையுடன் கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆளுநரிடம் 22 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் அளித்துள்ளனர். எடப்பாடி இந்த அரசுக்கு தலைமை தாங்குவதால் இந்த அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது.

இது போன்ற கடிதம் அளித்த அன்றே எடியூரப்பா விவகாரத்தில் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அழைத்த முன்னுதார அடிப்படையில் நீங்கள் சட்டப்பேரவையை கூட்ட உடனே உத்தரவிட வேண்டும்.

இந்த அரசு சட்டரீதியாக நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது , உடனடியாக பெரும்பான்மையை நிருபிக்க அழைக்க தவறும் பட்சத்தில் தாமதம் ஏற்பட்டால் அது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும்.

காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் என்ற முறையில் உடனடியாக முதல்வர் எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் , எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும்”

இவ்வாறு கே.ஆர்.ராமசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.