பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது

மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது.

ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந்தனை ஒருபோதும் சரிவரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வர் என நம்பலாம்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” தனது அண்மைய தினசரி ஆசிரிய தலயங்கத்தில் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா கூறியதை அடுத்து தென்பகுதிப் பேரினவாதசக்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளன.
இதில் பௌத்த பீடங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.

அதாவது இலங்கையின் ஆட்சி அதிகாரம் என்பது நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிடையே மாறி மாறி வருவதான இயல்பைக் கொண்டுள்ளது.

ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்காக கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் இரு பிரதான கட்சிகள் அடங்கிய எதிரும் புதிருமான ஆட்சியில் ஒன்றின் தீர்மானத்தை மற்றையது எதிர்ப்பது இலங்கையில் தவிர்க்க முடியாத இயல்பாகிவிட்டது.

அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு முற்பட்டால், அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கும்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக மறுக்கும்.
இதுவே இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்பான நடைமுறை.
எனவேதான் இணக்க அரசியல் என்ற கோட்பாடு நடைமுறைச் சாத்தியமற்றதெனக் கூறவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால், தேசிய அரசு அமையும் பட்சத்திலேயே அது சாத்தியமாகும் என அரசியல் நோக்கர்கள் கருத்துரைத்தனர்.

அவர்களின் கருத்துக் கணிப்பு சரியாகுமா? என்பதைப் பரீட்சிப்பதுபோல தேசிய அரசு உருவாகியது. ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டனர்.

இணைந்து செல்வதென கூட்டணி அமைத்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கியதேசியக்கட்சியும் தேசிய அரசை அமைத்தது.

தேசிய அரசு அமைத்தமை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்க உதவும் என எதிர்பார்த்தபோது, நடந்தது என்ன? என்பதை அண்ட சராசரம் முழுவதும் அறியும்.
நிலைமை இதுவாக இருக்கையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாக வேண்டு மாயின் தமிழர்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன என்பதை இனிமேலாவது தமிழினம் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டும்