பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள், ஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான், பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சவுதியில் தியேட்டர், விண்வெளித் திட்டம் போன்றவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தற்போது ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 21 வயது நிறைவடைந்த எந்த ஒரு பெண்ணும், யாரின் அனுமதியும் இல்லாமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய முறைக்கு சவுதி அரேபிய பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.