‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய அரசு தயார்’

”பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது; அதுபோல மாநில அரசுகளும் வரியை குறைக்க முன்வர வேண்டும்,” என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு, உற்பத்தி வரியும், மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரியும் விதிக்கின்றன.

கடந்த ஆண்டு, மார்ச்சில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,425 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 4,875 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

மத்திய, அரசு, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளது.அதேபோல, மாநில அரசுகளும், வரியை குறைப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இரு தரப்பும் இணைந்து செயல்பட்டால் தான், மக்கள் உரிய பலனை பெற முடியும்.பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ‘ஜி.எஸ்.டி.,’யின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இதை மாநிலங்கள் ஆதரிக்க முன்வரவில்லை. அவ்வாறு வந்தால், அது குறித்து பேச்சு நடத்த, மத்திய அரசுக்கு ஆட்சேபணை இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகிய ஐந்து பொருட்களை, ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் பரிந்துரைக்க வேண்டும். மாநில அரசுகளின் பிரதிநிதித்துவத்துடன் உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில், அதுபோன்ற பரிந்துரையை இதுவரை அளிக்கவில்லை. அதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஐந்து பொருட்களை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்கும் திட்டமில்லை. மாநிலங்களின் வருவாயில் ஏற்படும் தாக்கம் உட்பட பல்வேறுகாரணிகளை ஆராய்ந்து, தேவைப்பட்டால், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்பது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைக்கலாம். – நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சசர், பா.ஜ.,