பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலகல்

கத்தார் நாடு தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் கத்தார் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் சந்தித்தது. அந்த நாட்டுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது.

தரை வழியாகப் பொருட்களை, அண்டை நாடுகளான மற்ற அரபு நாடுகள் வழியாகத் தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் அந்தப் பாதையை சவுதி அரேபியா அடைத்ததால் பெரும் இன்னலுக்கு கத்தார் ஆளானது. கத்தார் உணவின்றித் தவிக்கும் சூழல் ஏற்பட்டு அந்நாட்டுப் பொருளாதாரம் முடங்கியது. இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டன. இந்தச் சிக்கலில் இருந்து கத்தார் தற்போது தான் வெளியே வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்கில்’ (OPEC) இருந்து வெளியேறப்போவதாக கத்தார் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் சத் அல் – காபி தோகாவில் கூறியதாவது

‘ஒபக்’ என அழைக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வருகிறது. ‘ஒபக்’ நாடுகளின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் எங்கள் முடிவை அறிவிப்போம்.

கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதுபோலவே அரபு நாடுகளிடையே மீண்டும் மோதல் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

دولة قطر تعلن انسحابها من عضوية منظمة الدول المصدرة للبترول “أوبك” اعتب