பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு டிடிவி தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை அதிகாரி வினய்குமாருக்குப் புகார் கடிதம் வந்துள்ளது.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் கூட்டாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூரு, பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சசிகலா, கறுப்புப் பண பதுக்கலில் கைதான வீரேந்திரா, கர்நாடக நெடுஞ்சாலை துறை முதன்மை செயலர் ஜெயச‌ந்திரா, கனிம தாது வழக்கில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் படேரியா உள்ளிட்ட பணக்கார கைதிகளிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏராளமான வசதிகளை செய்து கொடுக்கிறார்.

சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமாரின் வலது கரமான இவர், சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். மின் அடுப்பு, குளிர்சாதன பெட்டி, எல்இடி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ஆம்புலன்ஸ் மூலம் சிறைக்குள் கொண்டு வந்தார்.

இது தவிர ஓசூரில் உள்ள அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நெருக்கமான மகாதேவ் என்பவரின் வீட்டில் இருந்து சசிகலாவுக்கு தேவையான பொருட்கள், உடைகள், உணவு, பழங்கள், மருந்து ஆகிய வற்றையும் அவர் கொண்டு வந்தார்.

இதற்காக பயன்படுத்தப்பட்ட கே.ஏ. 42 ஜி 919 மற்றும் கே.ஏ. 42 ஜி 799 ஆகிய 2 ஆம்புலன்ஸ்களை சோதனை செய்யாமலே சிறைக்குள் கொண்டு வந்தார். சசிகலாவுக்கு சகல வசதிகளை கஜராஜ் செய்துகொடுத்ததால் அவரது கட்சியினர், உறவினர் ஆகியோர் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தனர். இதற்காக கஜராஜ் 3 செல்போன்களையும், 4 சிம்கார்டுகளையும் பயன்படுத்தினார்.

இரவில் நடந்த சந்திப்பு

சசிகலாவை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள் ஆகியோர் முன்அனுமதி பெறாமல், கஜராஜுக்கு லஞ்சம் கொடுத்து சிறைக்குள் வருகின்றனர். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் குறித்து சிறையின் வருகை பதிவேட்டில் பதிவு செய்யாமல், விதிகளை மீறி இந்த சந்திப்பு நடக்கிறது.

குறிப்பாக டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக், அதிமுக (அம்மா) அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வழ‌க்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் இரவு 7 மணிக்கு பிறகும் சிறைக்குள் வந்து சசிகலாவை சந்தித்துள்ளனர்.

இதே போல சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருக்கு நெருக்கமான ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரும் கஜராஜ் மூலம் சசிகலாவை சந்தித்துள்ளார். சசிகலா இவர்களை சந்திக்க பாதுகாப்பு அதிகாரியின் அறையை இவரே ஒதுக்கி கொடுத்தார்.

இதனால் கஜராஜுக்கு தமிழக அதிமுக‌ எம்எல்ஏ ஒருவருக்கு சொந்த மாக‌ ரிசார்ட்டில் அடிக்கடி விருந்து தரப்படுகிறது. அப்போது கஜராஜுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் தரப்படுகிறது. இதில் சரிபாதி பங்கு தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், டிஜிபி சத்தியநாராயண ராவ் ஆகியோருக்கும் சென்றது. டிஜிபி சத்தியநாராயண ராவ் தொடக்கத்தில் சசிகலாவுக்கு எதிராக கெடுபிடி காட்டினார். பின்னர் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்தார்.

சொத்துக்குவித்த எஸ்.ஐ.

சசிகலாவுக்கு உதவியதால் தினகரன் கொடுத்த லஞ்சப் பணத்தில் பன்னாரகட்டா சாலையில் 1,200 சதுர அடியில் வீட்டு மனை ஒன்றை கஜராஜு வாங்கியுள்ளார். நாகனஹள்ளியில் 2 மாடி வீடு கட்டியுள்ளார். டிராவல்ஸ் தொழிலும் செய்கிறார். இந்தப் புகார் தொடர்பான அனைத்து தகவல்களும் சிறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.