புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், ரத யாத்திரையை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ரத யாத்திரை நடக்க உள்ளது.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் ரத யாத்திரையின்போது, லட்சக்கணக்கான மக்கள் குவிவர். நம் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர்.’கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

அதை விசாரித்த, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, ரத யாத்திரை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, கடந்த, 18ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும்’ என, அந்த மனுக்களில் கோரப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதி எஸ்.ரவீந்தர பட் முன்னிலையில் விசாரணைக்கு வருவதாக இருந்தது. பின், நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால், மக்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல், ரத யாத்திரை நடத்த அனுமதிக்கலாம். இதற்காக, பல நுாற்றாண்டுகளாக உள்ள நடைமுறையை, பாரம்பரியத்தை நிறுத்துவது
சரியாக இருக்காது.இது மக்களின் நம்பிக்கையை சார்ந்த விஷயம். கோவில் நடைமுறையின்படி, இந்த ஆண்டு ஜகன்னாதர் வெளியே வராவிட்டால், அடுத்த, 12 ஆண்டுகளுக்கு, அவர் வெளியே வரமாட்டார்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதுடன், தேவைப்பட்டால் ரத யாத்திரையின் போது, முழு ஊரடங்குக்கு, ஒடிசா மாநிலம் உத்தரவிடலாம். வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே, பூஜைகள் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து, புரி சங்கராச்சாரியார் முடிவு எடுக்க அனுமதிக்கலாம். மக்கள் கூடுவதற்கு அனுமதிக்காமல், ‘டிவி’யில் நேரடியாக ஒளிபரப்பலாம். புரி மன்னர் குடும்பம் மற்றும் கோவில் நிர்வாகம் மற்ற நிர்வாக நடைமுறைகளை கவனிக்க உத்தரவிடலாம்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.இதற்கு, ஒடிசா மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஹரீஷ் சால்வேயும் ஆதரவு தெரிவித்தார். ‘தன் சொந்த ஊரான மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரிக்கும்’ என, நீதிபதி,
அருண் மிஸ்ரா அமர்வு தெரிவித்தது.அதன்படி, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், தினேஷ் மகேஷ்வரி, ஏ.எஸ். போபண்ணா அமர்வு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் வழக்கை
நேற்று மாலை விசாரித்தது. அப்போது அமர்வு கூறியதாவது:ரத யாத்திரை தொடர்பான நடைமுறைகள், நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதனால், ரத யாத்திரையை எப்படி நடத்துவது என்பது குறித்து, மாநில அரசும், மத்திய அரசும், கோவில் நிர்வாகமும் இணைந்து முடிவு எடுத்துக் கொள்ளலாம்.நாங்கள், புரி ஜகன்னாதர் கோவில் தொடர்பான வழக்கை மட்டுமே கையாண்டுள்ளோம்.மாநிலத்தில் உள்ள மற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

வழக்கமாக, புரி ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை விழா, 10 நாட்களுக்கு மேலாக நடக்கும். இந்த ஆண்டு, இன்று துவங்கி, ஜூலை, 1ம் தேதி வரை நடக்க உள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ரத யாத்திரை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. அதனால், ‘ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ரத யாத்திரை நடக்கும்’ என, மாநில அரசு தெரிவித்துள்ளது.