புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா?- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் காரணம் காட்டி, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கடந்த மாதம் முதல் இரு மடங்காக உயர்த்தப்பட்டது போன்று, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் வினியோகத்திலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று பொதுவினியோகத் திட்ட பணியாளர்கள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த மாற்றங்கள் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், அதனால் பொதுவினியோகத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்துவிடும் என்றும் அந்த பணியாளர்கள் கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் அதனால் செயல்படுத்தப்படும் பொதுவினியோகத் திட்டம் தொடர்பான எந்தவொரு செய்தியையும் ஒதுக்கிவிட முடியவில்லை. அதுமட்டுமின்றி, பொதுவினியோகத் திட்டம் குறித்த அரசின் நகர்வுகள் எப்போதும் அச்சமூட்டுவதாகவும் உள்ளன. காரணம் கடந்த ஓராண்டில் பொதுவினியோகத் திட்டம் குறித்த தமிழக அரசின் செயல்பாடுகள் அத்தகையவையாகவே உள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதாக கடந்த ஆண்டு பொறுப்பு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அறிவித்தார். அதனால், மக்களுக்கு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் எச்சரித்தபோது, உணவுப் பாதுகாப்பு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை கடந்த 01.06.2017 முதல் மத்திய அரசு ரத்து செய்த போதும், அதனால் ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், மக்கள் மீது சுமை சுமத்தப்படாது என்றும் ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர்.

அடுத்த சில மாதங்களில் ஏற்கெனவே வழங்கிய இரு வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, சர்க்கரை விலையை கிலோ 13.50 ரூபாயிலிருந்து ரூ.25 ஆக தமிழக அரசு உயர்த்தியது. அதேபோல், உணவுப் பாதுகாப்பு திட்ட விதிகளைக் காட்டி இலவச அரிசித் திட்டத்தை ரத்து செய்யும் முடிவையோ, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் விலைகளை உயர்த்தும் முடிவையோ தமிழக அரசு எடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏற்கெனவே மாத வருமானம் ரூ.8333-க்கும் கூடுதலாக உள்ளவர்களை முன்னுரிமையற்ற பிரிவினராக தமிழக அரசு கணக்கெடுத்து வைத்திருக்கிறது. அதனடிப்படையில் முன்னுரிமையற்ற பிரிவினருக்கு இலவச அரிசி வழங்க முடியாது என்று தமிழக அரசு அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.

பொதுவினியோகத் திட்டத்தின் பயனாளிகளை அவர்களின் ஊதியம், உடமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்த போதே அதை பாமக கடுமையாக எதிர்த்தது. அப்போதும் புள்ளி விவரங்களைத் திரட்டுவதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், முன்னுரிமையற்ற பிரிவினருக்கு பொருட்கள் நிறுத்தப்படாது என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டதைப் போன்று இப்போதும் மீறப்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொதுவினியோகத் திட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அதை சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயன்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன். பொதுவினியோகத் திட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இலவச அரிசித் திட்டத்தைக் கைவிடுதல், உணவு தானியங்களின் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தால் அதை அரசு கைவிட வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.