புதுமுக நடிகர்களுடன் பிரபுசாலமன் உருவாக்கும் ‘கும்கி 2’

பிரபுசாலமன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க ‘கும்கி 2’ உருவாக உள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, பிரபுசாலமன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தனது இயக்கத்தில் வரவேற்பைப் பெற்ற ‘கும்கி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் இல்லாமல் முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாக்க முடிவு செய்துள்ளார். முழுக்க காதல் கதையாக இருந்தாலும், கதையின் மையக்கரு யானையை வைத்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

‘கும்கி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இதற்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.