புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 271 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 16ம் தேதி 30 பேர், 17ம் தேதி 27 பேர் என கடந்த இரண்டு நாட்களில் 57 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. தற்போது, கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையில் 120 பேர், ஜிப்மரில் 22 பேர், காரைக்கால் அரசு மருத்துவ மனையில் 5 பேர், மாகியில் ஒருவர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிராவில் சிகிச்சையில் உள்ளார். மொத்தம் 149 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஜிப்மர் டாக்டரும் ஒருவர். ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், புதிதாக 12க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், மாஸ்க் தயாரிக்கும் கம்பெனியை சேர்ந்த 16க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தாலும், சுகாதாரத் துறையினரின் சிறந்த சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் நேற்று முன்தினம் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

மாகியில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.