புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் – எடப்பாடி ஆதரவாளர்கள் இணைந்தனர்.

இந்நிலையில், தினகரன் உருவபொம்மையை எரித்து புதுச்சேரி அதிமுகவினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், முன்னாள் எம்.பி., ராமதாஸ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், “தினகரன், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எப்போதுமே ஜெயலலிதாதான். இதை தினகரன் ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

இப்போது தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் பணத்துக்கு விலைபோக மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

இங்கிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக புறப்பட்டுச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஐ.ஜி., மற்றும் ஆட்சியரை சந்தித்து தினகரன் ஆதரவாளர்களை சொகுசு விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு மனு கொடுக்கவுள்ளோம்” என்றார்.