பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது

பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன.

முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக அளவில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தேவையான அனைத்து சிகிச்சைகளும் துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். முதல்வர் நிதிஷ்குமார், தொடர் உயிரிழப்புக்கள் குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். நோய் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படாததே நோய் தீவிரமடைய காரணம் என தெரிவித்துள்ளார்.

வைரசால் பரவும் இந்த மூளைக் காய்ச்சலின் அறிகுறிகளாக அதிக அளவில் காய்ச்சல், உடல்சேர்வு, தலைவலி ஆகியனவாகும். நீர்ச்சத்து குறைதல், ரத்த சர்க்கரை மிக வேகமாக குறைவது உயிரிழப்பிற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கல் காரணமாக 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நோயும், வெப்பமும் மக்களை காவு வாங்கி வரும் நிலையில், அண்டை மாநிலங்களிலும் இந்த நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.