பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் பாட தேர் வில் தவறான விடைகளுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி கே.வர்ஷினிதேவி சார்பில் அவரது தாயார் ஏ.கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது:

எனது மகள் கடந்த மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். மகளை மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம். மார்ச் 31-ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ‘பிறந்த குழந்தையின் உடல் எடையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?’’ என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு 85 முதல் 90 சதவீதம் என்பதுதான் சரியான விடை.

ஆனால், கேள்வித்தாளில் அந்த விடையே இல்லை. அதற்குப் பதிலாக 80 முதல் 90 சதவீதம், 55 முதல் 60 சதவீதம், 71 முதல் 78 சதவீதம், 80 முதல் 95 சதவீதம் என தவறான விடைகளே தரப்பட்டுள்ளன. தேர்வுக்குப் பிறகு மதிப்பீட்டாளர்கள் வெளியிட்டுள்ள சரியான விடையில், மாணவர்கள் 85 முதல் 90 சதவீதம் என்ற சரியான விடைக்குப் பதிலாக கேள்வித்தாளில் தரப்பட்டுள்ள நான்கு விடைகளில் ஒன்றான 80 முதல் 90 சதவீதம் என்பதை தேர்வு செய்து எழுதியிருந்தாலே ஒரு மதிப்பெண் தரப்படும் எனக் கூறியுள்ளனர். இந்தக் கேள்விக்கு 80 முதல் 90 சதவீதம் என குறிப் பிட்டு எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

புத்தகத்தில் உள்ள சரியான விடையை தராமல் கேள்வித்தாளை தயாரித்தவர்கள் குழப்பியுள்ளனர். எனவே, அந்த கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இதே கோரிக்கை யுடன் பலரும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவு:

தேர்வுக்கான விடைத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் குழு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மாணவர்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் என்றுதான் கூறியுள்ளோமே தவிர, மிகச்சரியான விடையைத் தேர்ந்தெடு என கூறவில்லை. அதன்படி, மாணவர்கள் கேள்வித்தாளில் உள்ள 80 முதல் 90 சதவீதம் என்பதை குறிப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மிகச் சரியான விடையான 85 முதல் 90 சதவீதம் என்று எழுதியிருந் தாலும் மதிப்பெண் வழங்க கூறியுள்ளோம். இந்த கேள் விக்கு வேறு பதில்களை தவறாக குறிப்பிட்டு இருந்தால் அவர் களுக்கு மதிப்பெண் வழங்க இயலாது’ என தெரிவித்துள்ளனர். இதை ஏற்க முடியாது.

கேள்விக்கான சரியான விடையை மாணவர்கள் பயிலும் புத்தகத்தின் அடிப்படையில் தேர்ந் தெடுத்து அதன்படிதான் கேள் வித்தாளை அமைக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு சரியான விடைதான் இருக்க வேண்டும். ஆனால், அந்த விடை கேள்வித் தாளில் இல்லை.

கேள்வித்தாளை தயாரிக்கும் குழு கவனமுடன் செயல்பட வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, தவறான விடைகள் தரப்பட்டுள்ள ஏ டைப் கேள்வித்தாளில் 14-வது கேள்வியாகவும், பி-டைப் கேள்வித்தாளில் 16-வது கேள்வி யாகவும் உள்ள இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஒருவேளை மதிப்பீடு செய்யும் பணி முடிந்து இருந்தால் இந்த ஒரு மதிப்பெண்ணை பள்ளித் தேர்வுகள் துறை இயக்குநர் கூடுதலாக சேர்க்க வேண்டும்.