பிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்

கேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் “பொய் பிரசாரம்” என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப்.

பிரெட் கேவனோவை நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார் அதனை தொடர்ந்து கேவனோ மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர் ஆனால் தன்மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை கேவனோ மறுத்து வந்தார்.

அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெட் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்ததை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்கிறார்.

இது அதிபர் டிரம்பின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நீதிபதியின் பதவி உறுதியானதால், இனி வரும் வருடங்களில் அமெரிக்காவின் உயரிய நீதிமன்றம் பழமைவாத கொள்கைக்கு ஆதரவான நிலைக்கு திரும்பலாம்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியானார் பிரெட் கேவனோ
டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி கவானா மீதான விசாரணை அறிக்கை தாக்கல்
கேவனோவின் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர், அதில் குறிப்பாக பேராசிரியர் கிறிஸ்டின் ப்லேசி ஃபோர்டும் ஒருவர்.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் பேராசிரியர் ஃபோர்ட் தானும் கேவனோவும் பதின்ம வயதில் இருந்தபோது 1982ஆம் ஆண்டு கேவனோவ் தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு முன் வாக்குமூலம் அளித்தார் ஃபோர்ட், ஆனால் அவரது நம்பகத்தன்மை குறித்தும் டிரம்ப் கேள்வி எழுப்பினார் மேலும் அவரை பேரணி ஒன்றில் கேலி செய்தார்.

கேவனோவின் நியமனத்துக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கானோர் வாஷிங்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்களன்று வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் விழாவை முன்னிட்டு பேசிய டிரம்ப், “நமது நாட்டின் சார்பாக நான் பிரெட்டிடமும் அவரின் குடும்பத்தினரும் அவர்கள் அனுபவித்த வலி மற்றும் வேதனைக்காக மன்னிப்பு கோருகிறேன்.” என்று தெரிவித்தார்.

“பொய் மற்றும் வஞ்சனையை கொண்டு அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது ஆனால் ஒரு வரலாற்று கண்காணிப்பில் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.” என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் கேவனோ மீது எழுந்த புகார்கள் குறித்து எஃப்.பி.ஐ விசாரணையை முடித்தது. ஆனால், அதன் விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

விண்கல்லை கதவுக்கு முட்டுக்கொடுக்க 30 ஆண்டுகள் பயன்படுத்திய நபர்
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeToo
கேவனோவின் மீது புகார் கூறிய பேராரசியர் ஃபோர்டுக்கு வரும் உயிர் அச்சுறுத்தல்களால் அவர் வீடு திரும்ப முடியவில்லை என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் தனது பணியை பாதிக்காது என கேவனோ தெரிவித்தார்.

“செனட்டால் உறுதிசெய்யப்படும் முறை மிகவும் சர்ச்சைக்குரியதாகவும், உணர்சிவயமாகவும் இருந்தது” என்று தெரிவித்த அவர்,”அந்த நடைமுறை தற்போது முடிந்துவிட்டது எனவே சிறந்த நீதிபதியாக இருப்பதில் நான் இனி கவனம் செலுத்துவேன்” தெரிவித்துள்ளார்.