பிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது,

அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது.

ஆனால், இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், வெளியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தனியாக இன்னொரு விதமாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் தெரீசா மே-க்கு எதிராக யார் போட்டி போடுவது என்பதில், எதிரணியினர் பிளவுண்டு இருப்பதாக தெரிகிறது,

பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுகின்ற பொறிமுறையான 50வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தாமதமாகும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிஎம்டி நேரப்படி மாலை 6 முதல் 8 மணிக்குள் இந்த வாக்கெடுப்பில் வாக்கு செலுத்தவுள்ளனர்.

படத்தின் காப்புரிமைAFP
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கி கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் மே கூறியுள்ளார்.

பிரதமர் தெரீசா மே மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு தேவையான 48 கடிதங்களை பெற்ற பின்னர், பிரதமர் பதவிக்கு இந்த சவால் எழுந்துள்ளது.

2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது தெரீசா மே பிரதமராக பதவியேற்றார்.