பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலை

ராகுலால் பெருமளவு வாக்காளர்களை கவர முடியவில்லை என்று நினைத்த காங்., அவரது சகோதரி பிரியங்காவை கட்சிக்குள் கொண்டு வந்த பிறகு, அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆன பிறகு, உ.பி., சென்ற பிரியங்காவுக்கு அவர்கள் அளித்த வரவேற்பில் இது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கணவர் என்ற முறையில் வாத்ராவை பிரியங்கா ஆதரி்ப்பது, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியினர் அஞ்சுகின்றனர்.

சில மூத்த தலைவர்கள் இது பற்றி கூறியதாவது: வழக்குகளின் பிடியில் உள்ள வாத்ராவுக்கு ஆதரவாக இருப்பதாக பிரியங்கா அடிக்கடி காட்டிக்கொள்வதால், கட்சியின் இமேஜ் பாதிக்கப்படும். பிரியங்கா பொதுச்செயலாளராகவும் இருப்பதால், வாத்ராவை காப்பாற்றுவதற்கு கட்சியையும் பிரியங்கா பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பொதுமக்களிடம் பேசுவதற்கு வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை இருக்கின்றன. வாத்ராவை காப்பாற்றுவது முக்கியம் அல்ல. அரசியல் ஆதாயம் பெறுவதற்கு சில கடைசி நேர உத்திகளை காங்., திட்டமிட வேண்டி உள்ளது. ஒரு கணவருக்கு சாதாரண மனைவியாக ஆதரவு தருவதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் காங்., பொதுச்செயலாளர் என்ற முறையில் வாத்ராவுக்கு பிரியங்கா தரும் ஆதரவு, கட்சியின் பெயரை கெடுத்து விடும்.

முன்பெல்லாம், வாத்ரா பற்றி பேசும்போதும், ‛‛அவர் தனிப்பட்ட நபர். கட்சிக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்பார்கள்கள் கட்சியினர். ஆனால், பிரியங்கா வந்த பிறகு, அந்த நிலைப்பாடு மாறிவிட்டது. பிப்.5ம் தேதி, உ.பி., (கிழக்கு) பொதுச்செயலாளராக பதவி ஏற்க காங்., கமிட்டி அலுவலகத்திற்கு பிரியங்கா சென்றபோது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக வாத்ராவை இறக்கி விட்டு சென்றார். விசாரணை முடிந்த பிறகு மீண்டும் வந்து கணவரை அழைத்து சென்றார்.

பிப்.11ல் லக்னோவில் நடந்த ஊர்வலத்தில் ராகுலுடன் கலந்து கொண்டார் பிரியங்கா. அன்று மாலையே நில மோசடி விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஜெய்ப்பூருக்கு சென்ற வாத்ரா மற்றும் அவரது தாயார் மவுரீனுடன் பிரியங்காவும் சென்றார். இதன் மூலம், ‛‛இனிமேல் வாத்ரா, தனிப்பட்ட நபர் அல்ல. அவரும் கட்சியில் ஒரு அங்கம் தான். அவர் உதவிக்கு கட்சி வரும்” என் சொல்லாமல் சொல்கிறார் பிரியங்கா.

லண்டனின் மையப்பகுதியில் ஆடம்பர சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் விசாரணைக்கு வாத்ரா சரியாக ஒத்துழைப்பது இல்லை என ஏற்கனவே அமலாக்கத்துறை புகார் கூறி வருகிறது. எனவே, விசாரணைக்கு வாத்ராவை அடிக்கடி அமலாக்கத்துறை வரச்சொல்லும். அப்போதெல்லாம் அந்த விஷயம், டிவி தலைப்புகளில் பரபரப்பாக இடம் பெறும். உடனே, அவருக்காக காங்., கட்சி களத்தில் இறங்க வேண்டி வரும்.

வாத்ராவின் நடவடிக்கைகளால் சோனியாவின் குடும்பத்திற்குள் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது, பா.ஜ.,வுக்கும் நன்கு தெரியும். அமலாக்கத்துறையின் விசாரணைகளால் சோனியாவின் குடும்பத்திற்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும். 1989ல் போபோர்ஸ் விவகாரம் கட்சியை ‛காவு’ வாங்கியது. எனவே, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கட்சி முடிவு செய்தாக வேண்டும். ஆக்கப்பூர்வமான அரசியலை விட்டுவிட்டு, வாத்ராவை காப்பாற்றும் வேலையில் இறங்கினால், அது தற்கொலையாக முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.