பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!

பிரிட்டனில் இருந்து டில்லி திரும்பிய பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. அங்கிருந்து ரயிலில் தப்பிய அவர் ஆந்திரவில் ராஜமகேந்திரவரத்தில் சிக்கினார். அங்கு அவரையும், மகனையும் தனி வார்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள அனுமதித்துள்ளனர்.

ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்த, பெண் ஒருவர், பிரிட்டனில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21ம் தேதி டில்லி திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவரை தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால், அங்கிருந்து தப்பிய அவர், ஆந்திரா எக்ஸ்பிரஸ் மூலம் சொந்த ஊருக்கு கிளம்பினார். உடன் அவரது மகனும் பயணித்துள்ளார்.

இதனையறிந்த டில்லி அதிகாரிகள், ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ராஜமகேந்திரவரம் அதிகாரிகள் அந்த பெண்ணை, ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்தனர். ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த அவர், தனக்கு அறிகுறியற்ற கொரோனா உள்ளதால், வீட்டு தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்ததால், டில்லியில் இருந்து கிளம்பியதாக கூறினார்.

தொடர்ந்து அதிகாரிகள், இருவரையும் மருத்துவமனை அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். பிரிட்டனில் பரவும் புது வகையான கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என தெரிந்து கொள்ள, பெண்ணின் சளி மாதிரிகளை, புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.