பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜெனிவா நோக்கி செல்லும் சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஊர்தி

ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி பிரான்சில் இருந்து தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட ஊர்தி பயணிக்கவுள்ளது.

இந்த ஊர்தியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கடந்த எழுபத்தொரு ஆண்டுகளாக இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நிழற்படங்களாக பொறித்தும் அந்த இனப்படுகொலைக்கு தலைமையேற்ற இலங்கை அரச தலைவர்களின் விபரங்கள் புகைப்படங்கள் பொறித்தும் இந்த தமிழின நீதி கோரும் ஊர்தி ஐநா நோக்கி செல்ல இருக்கின்றது.

மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளான எதிர்வரும் 25ம் திகதி இந்த ஊர்தி ஜெனிவா முன்றலை சென்றடையும்.அன்றைய நாளில் இருந்து கூட்டத்தொடர் முடியும்வரை புகைப்படங்கள் விபரங்கள் ஜெனிவா முன்றலில் காட்சிக்கு வைக்கப்படும்.
கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் இடம்பெறும் போது தொடர்ந்து புகைப்படங்களை மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் காட்சிக்கு வைத்து உலகின் பல்வேறு நாடுகளில் இருந்துவரும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை கவனயீர்ப்பு செய்து தமிழினப்படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டுவதற்கான ஆதரவை கோரிவருகின்றார்.ஏழாவது ஆண்டாக இம்முறையும் ஊர்தி உள்ளிட்ட தமிழின சாட்சியங்களை ஜெனிவாவின் முன்றலில் வைத்து ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நீதி கோரவிருக்கின்றார்.