பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.

பிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5வது தொடர் வருடமாக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இவ்வருடம் முக்கிய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

பல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிரம்ரன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் வாழ்த்தி மகிழும் இவர்களது பாராட்டுக்களுடன், பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகைக்காக களம்கட்டி நிற்கிறது கரபிராம் ஈழம் சாவடி 2017.

கலாச்சாரப் பிரிவுகள் பலவற்றின் சங்கமமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 14 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும், பிரம்ரன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஈழம் சாவடி இன்று யூலை 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 15ஆம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 16ஆம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது. உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சுழயன சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர். வெள்ளி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ ஆரம்பவிழாவிற்கு பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.