பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவலை அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ‘சிகரம்’ தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் ‘பாலு’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

மங்காத வெண்கல குரலும் , கர்வம் தங்காத குழந்தை மனம் படைத்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நலகுறைவால் மரணமடைந்தார். தன்னுடைய வசீகர குரலினால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் வீடுகளில் நிரந்தரமாக வாசம் செய்த எஸ்.பி.பியின் மரணம் ரசிகர்களை சோக கடலில் தள்ளியுள்ளது.

கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தவர், இப்போது நிரந்தரமாக தூங்க சென்றுவிட்டார். இந்த பாடும் நிலா மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மங்காமல் ஒலித்து கொண்டே இருக்கும்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.சரண் கூறியதாவது: சரியாக 1:04 மணிக்கு உயிர்பிரிந்தது. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும் வரை அவரது பெயர் நிலைத்திருக்கும் எனக்கூறினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக.,5ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14ம் தேதி கொரோனா காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டதால், உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் குழுவினர் உன்னிப்பாக கவனித்து வந்தனர். செப்.,4ல் அவர் கொரோனாவில் இருந்து குணமானார். இன்று காலை பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக,உயிர்காக்கும் உபகரணங்களுடனும், டாக்டர்களின் சிறந்த சிகிச்சையும் மீறி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மாரடைப்பும் ஏற்பட்டது. மிகுந்த சோகத்துடன் அவர், செப்.,25 பிற்பகல் 13: 04 மணிக்கு காலமானார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.