பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகர்ந்துள்ளார்.

திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

மும்பை தாஜ் ஹோட்டலில் உள்ள அரங்கில் திருமணத்துக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டு இந்த ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. அந்த படங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து டிரண்டாகி வருகின்றன.

தமிழில் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விஜயுடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான், ஜெயம் ரவியுடன் கோமாளி உள்ளிட்ட படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். மும்பையில் பிறந்த காஜல் அகர்வால் தொடக்கத்தில் இந்தி பட உலகில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் ஒரே சமயத்தில் நடித்து வந்தார்.

தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்ற காஜல் கூறியுள்ளார்.