பிரபலமாகும் KOO செயலி – அரசியல்வாதிகளும்… சினிமா பிரபலங்களும் ட்விட்டரை விட்டு கூ வுக்கு தாவல் !!

ட்விட்டரின் இடுகைகள் பதிவு அம்சங்களை கொண்டதாக கூ செயலி அறிமுகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்த செயலி அறிமுகமானது. இதை போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

இந்த செயலியை உருவாக்கியவர்கள் அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா. இருவரும் இந்தியர்கள்.

கூ செயலி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கிறது. பிளேஸ்டோரில் இதுவரை இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

கூ செயலி, தனது இணையதளத்தில் “இந்தியாவில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். சுமார் 100 கோடி பேருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களின் கரங்களில் செல்பேசி இருக்கிறது. இன்டர்நெட்டில் பெரும்பாலானவே ஆங்கிலத்திலேயே உள்ளது. கூ செயலி, இந்தியர்களின் குரலை கேட்க விரும்புகிறது,” என்று கூறியிருக்கிறது.

ட்விட்டர் நிறுவனம் போல கணக்கை தொடங்க கூ செயலி, அதிக தகவல்களை கேட்பதில்லை. செல்பேசி எண் இருந்தால் போதும், செயலிக்குள் நுழைந்து தங்களுடைய பெயரையும் செல்பேசி எண்ணையும் பதிவு செய்தால் OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் செல்பேசிக்கு குறுந்தகவலாக வரும். அதை தட்டச்சு செய்தால் போதும், கூ செயலியில் கணக்கைத் தொடங்கி இடுகைகளை பதிவிடத் தொடங்கலாம்.

கூ செயலியை பிரபலப்படுத்தும் அமைச்சர்கள்

கூ செயலி சந்தைக்கு வந்து ஓராண்டை நெருங்கும் வேளையில், அரசின் சுயசார்பு புதுமை சவாலை எதிர்கொள்ளும் நோக்கத்தின் முகமாக கூ செயலி பார்க்கப்படுகிறது.

இந்திய தயாரிப்பான கூ செயலியைப் போலவே ஸ்பார்க், ஸோஹோ ஆகிய செயலிகளும் இந்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் சுயசார்பு இந்திய சமூக ஊடக தளங்களாக சந்தையில் வலம் வருகின்றன. இதேபோல, காணொளி செயலிகளான சிங்காரி, ஸோஜோ டிக் டாக் ஆகியவை, டிக்டாக் செயலி இந்தியாவில் தடைவிதிக்கப்பட்ட காலகட்டத்தில் தொடங்கப்பட்டன.

கடந்த ஆண்டு மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் என்ற வானொலி நிகழச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கூ என்ற செயலி மூலம் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பேசலாம், தகவல் பரிமாறலாம், குரல்களை பகிரலாம் என்று கூறியிருந்தார்.