பிரபலமாகிறது தேர்தல் சுற்றுலா : இந்தியா வர ஏராளமான வெளிநாட்டினர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக கருதப்படும், லோக்சபா தேர்தல், இரண்டு மாதங்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாகவே நடக்க உள்ளது. 90 கோடி பேர் ஓட்டளித்து, லோக்சபாவுக்கு, 543 பேரை அனுப்ப உள்ளனர்.ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், 400க்கும் மேற்பட்ட கட்சிகள் என, மிக பிரமாண்டமான இந்தத் தேர்தல் திருவிழா, சுற்றுலா பயணியரையும் சுண்டி இழுக்கிறது.

இதற்காக, சிறப்பு, தேர்தல் சுற்றுலா திட்டங்களை, பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.வழக்கமான சுற்றுலா திட்டங்களில், ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது குறிப்பிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வர். பயண திட்டம், தங்கும் வசதி, உணவு வசதி போன்றவை, சுற்றுலா திட்டங்களில் அடங்கி இருக்கும்.
வழக்கமான இந்த திட்டங்களுடன், தற்போது, தேர்தல் சுற்றுலா திட்டங்களும் பிரபலமடைந்து வருகின்றன.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான, இந்தியாவின் தேர்தல், எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை ஆராய, உலக நாடுகள் பலவற்றிலும், ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். அதை, இந்திய சுற்றுலா நிறுவனம், பணமாக மாற்ற முயல்கிறது.

இந்தியாவில், தேர்தல் சுற்றுலாவுக்கு அடித்தளம் இட்டது, குஜராத் மாநிலம். குஜராத் சுற்றுலா வாரிய சொசைட்டியின் தலைவரான, மணிஷ் சர்மா, தேர்தல் சுற்றுலாவை, 2012ல் அறிமுகம் செய்தார்.இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சென்று பார்க்கலாம். அத்துடன், அங்கு நடக்கும் தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பார்க்கலாம். மேலும், பொதுமக்கள் மற்றும் சில அரசியல்வாதிகளையும் சந்தித்து, தேர்தல் குறித்து விவாதிக்கலாம்.

குஜராத்தில் துவங்கிய இந்த திட்டம், தற்போது, பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த தேர்தல் சுற்றுலாவுக்கு, பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்படும், தேர்தல் சுற்றுலாவை பார்ப்பதற்கு, 3,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில், பெரும்பாலானோர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பத்திரிகையாளர்கள், தேர்தல் ஆராய்ச்சியாளர்கள், அரசியல் அறிவியல் மாணவர்கள் என, பலரும் உள்ளனர்.உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள, உலக பிரசித்தி பெற்ற காதல் சின்னம், தாஜ்மஹாலை பார்த்துவிட்டு, அதற்கு அருகில் நடக்கும், கட்சிகளின் பிரசார கூட்டங்கள், பேரணிகளையும் கண்டு ரசிக்க, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர், அமித் ஷா, காங்கிரசின் பிரியங்கா ஆகியோரின் பிரசாரங்களை கேட்பதற்கு, பலர், அதிக ஆர்வம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், ஐந்து – எட்டு நாட்கள் கொண்டது.நம் ஜனநாயகத்தின் வலிமையை, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கு, வாய்ப்பு கிடைத்துள்ளது.உள்நாட்டு தேர்தல் சுற்றுலாவும் உள்ளது. வட மாநிலங்களில் எப்படி பிரசாரம் செய்கின்றனர்; தேர்தலை எப்படி அணுகுகின்றனர் என்பதை நேரடியாக தெரிந்து கொள்வதற்கு, இந்த தேர்தல் சுற்றுலா திட்டம்
உதவுகிறது.நீங்களும் ஒரு எட்டு, அப்படியே, பக்கத்து மாநிலத்திற்கு ஒரு நடை சென்று, அங்கு எப்படி தேர்தல் நடக்கிறது என, பார்த்து வாருங்களேன்!