பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. புதிய அரசு மே மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்படும். இதேபோன்று அடுத்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும்.

இந்நிலையில், அரசியல் உற்றுநோக்குனர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடையவரான மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய உங்களது கணிப்புகளை கூறுங்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெட்லி, விராட் கோலி மற்றும் நரேந்திர மோடி இருவரும் தங்களது துறைகளில் ஆச்சரியப்படத்தக்க வீரர்கள். அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது என கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, கோலி தலைமையிலான இந்திய அணியை டி20 போட்டியில் வீழ்த்துவது மிக கடினம். தேர்தலை எடுத்து கொண்டால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது தோல்வி அடைந்த விசயம். நிலை தன்மை அல்லது கொள்கைகள் இல்லாத அல்லது தலைவரை பற்றிய நிச்சயம் இல்லாத கூட்டணியினரை தேர்வு செய்து, தற்கொலை செய்து கொள்ள எந்த நாடும் முன்வராது என கூறினார்.