பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்

காங்., கட்சியின் மூத்த தலைவரான, மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இழிவானவர் என்று பொருள்படும், ‘நீச்’ என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 2017 டிசம்பரில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின், அமைதியாக இருந்த மணிசங்கர் அய்யர், ‘ரைசிங் காஷ்மீர்’ மற்றும் ‘த பிரின்ட்’ ஆகிய ஆங்கில நாளிதழ்களில், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது வாயில் இருந்து, இழி சொற்களே வருகின்றன. எப்படி இருந்தாலும், வரும், 23ல், மோடியை, நாட்டு மக்கள் துரத்தி அடிக்க உள்ளனர். கடந்த, 2017ல், மோடி குறித்து, நான் கூறியது ஞாபகம் இருக்கிறதா… நான் தீர்க்கதரிசி அல்லவா?

மறைந்த முன்னாள் பிரதமர், ஜவஹர்லால் நேருவை, ஒரு சிலர் ஏன் எதிர்க்கின்றனர் என்பது, இப்போது தான் புரிகிறது. அதிகம் படித்த நேரு, ‘மூடநம்பிக்கைகளில் இருந்து மீண்டு, அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்’ என, வலியுறுத்தினார். இதை, சிலர் விரும்பவில்லை. ‘புராண காலத்திலேயே, ஹிந்துக்கள் போர் விமானத்தை பயன்படுத்தினர்; ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள் உருவாக்கியது ஹிந்துக்கள் தான்’ என, ஹிந்து கடவுள் விநாயகரை உதாரணம் கூறுகின்றனர்.

தன் படிப்பு குறித்து, மோசடியான தகவல்களை கொடுத்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் வகையில், கருத்து கூறி வருவது வருத்தம் அளிக்கிறது. பொய் தகவல்களை கூறுவதை, மோடி வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல், தனிப்பட்ட முறையில், கட்சித் தலைவர்களை விமர்சித்து, பிரதமர் பதவிக்கான தரத்தை குறைத்துள்ளார். இவ்வாறு அந்தக் கட்டுரையில், மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.