பிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் தெரிவித்ததாவது: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்ட பின், எங்கள் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த நிகழ்வுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய, சராசரியாக தினமும் 350 விண்ணங்கள் வந்து கொண்டிருந்தன. பிரணாப் கலந்து கொண்ட பின், தினமும் 1,200 முதல் 1,300 விண்ணப்பங்கள் வரை வருகின்றன.

இதில் பெரும்பாலன விண்ணப்பங்கள், பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., மீதான நம்பிக்கை அதிகரிப்பே, இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையில், பல எதிர்ப்புக்கு மத்தியில் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரணாப் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவிக்கையில், ‘ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில், பிரணாப் பங்கேற்றதில் தவறேதும் இல்லை. என்னை அழைத்தால் கூட செல்வேன். ஆனால், பிரணாப் முகர்ஜி, ‘பாரத தாயின் தவப்புதல்வன்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனரை கூறியது, சரியல்ல’ என கூறியுள்ளார்.