பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளுக்கு உட்பட்ட ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு, கருமாரியம்மன் தெரு, தங்கவேல் பிள்ளை தெரு, மதுரை முத்து தெரு, மண்ணப்பன் தெரு, சாய்பாபா கோவில் தெரு உள்பட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, கே.பாண்டியராஜன் உள்பட நிர்வாகிகளும் ஆதரவு திரட்டினர். பிரசாரத்தின்போது வாக்காளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

இரும்பு கோட்டை

ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதே கொள்கை கோட்பாடோடு ஜெயலலிதா, 1½ கோடி தூய தொண்டர்களுடன் எந்த கொம்பாதி, கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக மாற்றி காட்டினார்.

ஆனால், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்றிருக்கிறது. ஜெயலலிதா யாரை விரட்டினாரோ? அவரே(டி.டி.வி.தினகரன்) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தொப்பிக்காரர்கள் தலையில் பணமூட்டையை சுமந்து செல்கிறார்கள். நாம், பாசத்தை தலையில் சுமந்து செல்கிறோம்.

பணமா? பாசமா?

பணமா? பாசமா? என்கிற போட்டியில் பாசம்தான் உறுதியாக வெற்றி பெறும். ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள சந்தேகங்கள் நாட்டு மக்களுக்கு தெரியும் வரை எங்களுடைய தர்ம யுத்தம் ஓயாது. விரைவில் இந்த பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும். ஜெயலலிதா விரும்பிய மக்களாட்சி தத்துவத்தின்படி அவருடைய நல்லாட்சி மீண்டும் மலரும்.  இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது, தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மதுசூதனனுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.