பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக 2004-06ம் ஆண்டு வரை இருந்தார்.

அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொதுமேலாளர் பிரம்மநாதன், துணை மேலாளர் எம். வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன்நெட்வொர்க் துணைத் தலைவர் கண்ணன், தொழில்நுட்ப ஊழியர் ரவி ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு தில்லி சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தவழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7 பேரின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மீதான மனுவின் மீதான விசாரணை, வாதங்கள் முடிந்தன. இதில் மாறன் சகோதரர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

ஆனால், மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 9-ம் தேதி தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சிபிஐ நீதிபதி நடராஜன் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், பிஎஸ்என்எஸ் முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.