பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும், அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒருமாதிரி பட்ஜெட்டை வெளியிடுவது வழக்கம். 15-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டாக்டர் ராமதாஸ் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-

தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் நிர்வாக கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அரசு திட்டங்களில் ‘அம்மா’ என்ற பெயர் அகற்றப்படும்

வரும் காலங்களில் எந்த அரசு திட்டத்துக்கும் தனி மனிதர்கள் பெயர் சூட்டப்பட மாட்டாது. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அனைத்து பள்ளிகளும் கேந்திரிய பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வை சந்திக்க 9-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இலவச பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மின் கட்டணம் 10 சதவிதம் குறைக்கப்படும். மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும்.

3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. சென்னையில் அனைவருக்கும் இலவசமாக பஸ் பயணம் செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சு கொல்லி மருந்து இலவசமாக வழங்கப்படும்.

விவசாயிகள் தற்கொலை செய்தால் அதை அரசின் தோல்வியாக கருதி ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

வறட்சியில் பாதித்த நெற் பயிர் மற்றும் நிலைக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.90 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.

வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் நிபந்தனை இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது. சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.

ஒருதலை காதல் கொலைகளை தடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு அமைக்கப்படும்.

ஒருதலை காதலால் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டால் குடிநீருக்கு அவர்கள் செலவழித்ததை போன்று 10 மடங்கு இழப்பீடு தொகையை அரசே வழங்கும்.

பொது இடங்களில் இலவச வை-பை வசதி செய்யப்படும். பூரண மது விலக்கு கொண்டு வரப்படும். பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

நிகழ்ச்சியில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், ஈகை தயாளன், வெங்கடேசன், சகாதேவன் உள்பட பவர் கலந்து கொண்டனர்.