பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுர வேகத்தில் செய்து வருகிறது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கி விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர் கதையாகி வருகிறது.
அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

latest tamil news

நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.
காங்கிரசில் இருந்த குஷ்பு, பா.ஜ., செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். எனினும், காங்கிரசில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தார். அதைத் தொடர்ந்து, அவரை தங்கள் பக்கம் பா.ஜ., இழுத்துள்ளது.

அதேபோல், அரசு பணியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணா மலையை பின்பற்றி, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமாரும், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வருவாய் பணி அதிகாரியாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். கடந்த, 2017ல் விருப்ப ஓய்வு பெற்றார்; சட்டம் படித்துள்ளார்.வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். மேலும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.

தென்சென்னை தொகுதி தி.மு.க., — எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் உறவினர். அ.ம.மு.க.,வில் ஓராண்டு இருந்தார். அதன்பின் அதிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.இவரது தந்தை, காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் பணி செய்து வந்தார். பஸ் வசதி இல்லாத குக்கிராமத்தில் பிறந்து, தன் கற்றல் ஆர்வம் காரணமாக, நன்கு படித்து, ஐ.ஆர்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, வருமான வரி அதிகாரியாக பணியாற்றினார்.

இதுபோல, படித்த நபர்கள், பிரபலங்கள் எல்லாம், பா.ஜ.,வை நோக்கி வருவது, அக்கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், திராவிட கட்சிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் கூறுகையில், ”தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.
”அடுத்து, மாநில தலைவர் முருகன் நடத்த உள்ள, ‘வெற்றிவேல் யாத்திரை’ தமிழகத்தில், மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும்,” என்றார்.

தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, தேசிய பொதுச்செயலர், சி.டி.ரவி நியமிக்கப்பட உள்ளார். நேற்று அவர் முன்னிலையில் தான், நடிகை குஷ்பு, பா.ஜ.,வில் இணைந்தார்.
சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து, மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேச, சி.டி.ரவி, வரும், 17ம் தேதி சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பின், தமிழகத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அறிக்கை தர உள்ளார்.அதன் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, பா.ஜ., துவக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.