பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்

”மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாங்கள், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்,” என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில், இயற்கை பேரிடர் காலங்களில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, 4.86 கோடி மதிப்பீட்டில், 336 நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், பேரிடர் காலங்களில், சாலையில் விழும் மரங்களை, உடனுக்குடன் அகற்ற, 171 மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற, அதிக திறன் கொண்ட, 17 மோட்டர் பம்புகள் உள்ளன.தற்போது கூடுதலாக, 200 மரம் வெட்டும் இயந்திரங்கள், 30 மோட்டார் பம்புகள், மரக்கிளைகளை அகற்றும் ஆறு இயந்திரங்கள், 100 ஜெனரேட்டர்கள் என, 336 இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:ஜெ., இருந்த போதும், தற்போதும், கருத்துகளை மாறி மாறி கூறுபவர்களுக்கு மட்டும் தான், ‘அவர் இல்லாததால் குளிர்விட்டு போச்சு’ என்ற கருத்து பொருந்தும்.ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினி அளித்த பதில், நெருஞ்சி முள் போன்றது; அவர், வேற்று கிரகத்தில் இருந்து வந்து விடவில்லை.

அவரது கருத்தை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்த பதிலை வைத்து, அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை, மக்கள் தீர்மானிப்பர். பா.ஜ.,வை பற்றி, ரஜினி நேற்று ஒரு மாதிரியாகவும், இன்று ஒரு மாதிரியாகவும் பேசுகிறார்.மத்தியில், பா.ஜ., ஆட்சி நடத்துகிறது. எந்த கட்சி குறித்தும், நான் சான்றிதழ் அளிக்க முடியாது.

எங்களை பொருத்தவரை, தமிழக உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்.இவ்வாறு அவர் கூறினர்.