பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி

நாடு முழுவதும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த சூழலில் மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கருத்துக்கணிப்பு பொய்யானது நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்., தலைவர் ராகுல் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். அவரது பிரதமர் கனவு பலிக்கவில்லை.

லோக்சபா தேர்தல் ஏப்., 11ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதலே, பா.ஜ., கூட்டணி முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

உபி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 8 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமேதியில் பின் தங்கினார்.

மாநிலங்களை பொறுத்தவரை உபி., மத்தியபிரதேசம், மே.வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார், புதுடில்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பா.ஜ., கூட்டணியே பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசை பொறுத்தவரை பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. உ.பி.,யில் மாநில முக்கிய கட்சியான சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், பெரும் தோல்வி தான் கிடைத்துள்ளது. இக்கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. இடதுசாரிகளுக்கு கேரளாவை தவிர பிற மாநிலங்களில் பெரும் வெற்றி வாய்ப்பு இல்லை.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்குவங்கதத்தில் பா.ஜ., இதுவரை இல்லாத அளவிற்கு 20 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா கட்சி பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி தர்மபுரியிலும் , தேனியிலும் மட்டும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கும் அதிமுகவுக்கும் பெரும் தோல்வியே கிட்டியுள்ளது. 22 தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவும், திமுகவும் சரி சமமாக வெற்றியை பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு பெரும் ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.