பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் தனது கார் டிரைவர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து

பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ரவுடிகளைத்தான் தங்களின் பாதுகாவலர்களாகவும், டிரைவராகவும் நியமித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

முன்னணி நடிகையான நயன்தாராவிடம் சேது என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் நயன்தாராவுக்கு பாதுகாவலராகவும் உள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சேது, ஜாமினில் வெளியே வந்தவர். இந்த கொலை வழக்கு ஆலப்புழா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சேதுவைதான் நயன்தாரா டிரைவராகவும், பாதுகாவலராகவும் நியமித்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன் கொச்சியில் உள்ள நயன்தாராவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சேது மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சேதுவுக்கு, பாவனாவின் கடத்தலிலும் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இது கேரளா மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.