பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால், அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. காரணம், வட மாநிலங்கள் பலவற்றிற்கும், பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், தொகுதிக்கு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அவரால் வர முடிகிறது. இந்த லோக்சபா தொகுதியின், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், மேலோட்டமாக, நகர்புறங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.ஆனால், காங்கிரஸ் வேட்பாளர், சுனில் ஜாக்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி, இரண்டு முறை, அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து விட்டார்.மேலும், சன்னி தியோலுக்கு சரிவர, உள்ளூர் பிரச்னைகளை பேசத் தெரியவில்லை.

பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இது குறித்து, அவரின் தேர்தல் மேனேஜர், அனில் வாசுதேவா கூறும் போது, ”சன்னி நீண்ட காலமாக, மும்பையில் வசிப்பவர். படங்களில் நடித்து வருபவர். அரசியலுக்கு புதியவர் தான். ”எனினும், தொகுதியின் பிரச்னையை நன்கு அறிந்து வைத்துள்ளார். நாங்களும், அவருக்கு சொல்லிக் கொடுக்கிறோம்,” என்றார்.லோக்சபா சபாநாயகராக, 10 ஆண்டுகள் பதவி வகித்த, பல்ராம் ஜாக்கரின் மகனான சுனில் ஜாக்கர், இந்த பகுதியில், இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக ஆனவர். மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர்; மக்களுக்கும் இவரைப் பற்றி நன்கு தெரிகிறது என்பது, பிளஸ் பாயின்ட்களாக உள்ளன.
நடிகரை பார்க்கும் மோகம், தொகுதி மக்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை, சுனில் ஜாக்கர், நாசுக்காக மறுக்கிறார். ”பாலிவுட் பிரபலங்களை பார்க்க, முன்னர் தான் மக்கள் ஆசைப்பட்டனர். காரணம், அப்போது, சினிமா மட்டும் தான் இருந்தது. ஆனால் இப்போது, 24 மணி நேரமும், ‘டிவி’ ஓடுகிறது. பாலிவுட் மீதான ஈர்ப்பு மக்களுக்கு இல்லை,” என்கிறார்.சுனிலுக்கு ஆதரவாக, அந்த பகுதியின், ஏழு காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல, சன்னிக்கும், பா.ஜ., பிரபலங்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர்