பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

‘பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும், அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நவ., 5ல் நடப்பதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரை, நவ., 14ம் தேதிக்கு, சிறிசேன ஒத்தி வைத்தார். ஆனால், தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் கூறி வந்தார்.இந்நிலையில், பார்லிமென்டை கலைப்பதாகவும், அடுத்தாண்டு, ஜனவரி, 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார்.

இதை எதிர்த்து, 13 மனுக்களும், சிறிசேனவுக்கு ஆதரவாக ஐந்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி, நலின் பெரேரா தலைமையிலான அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:பார்லிமென்டை கலைத்து, அதிபர் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது.

மேலும், அடுத்த ஆண்டு, ஜன., 5ல் தேர்தல் நடக்கும் என அறிவித்ததும் செல்லாது. உடனடியாக தேர்தல் பணிகளை நிறுத்த வேண்டும். இந்த மனுக்கள் மீது, வரும், டிச., 4 – 6 தேதிகளில் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அதிபர் சிறிசேன மற்றும் அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு, பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது