பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமான ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், மாவட்ட சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் சேர்ந்து டெங்கு இறப்புகளை வெளிப்படையாக கூறாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

வீடுவீடாக ஆய்வு

தற்போது ஓரளவு ‘டெங்கு’ கட்டுக்குள் வந்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் விசுவரூபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி அமைப்புகள் கொசு உற்பத்தியாவதை தடுக்க வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்புப் பிரிவைப் பார்வையிட்டதுடன், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

கொசு புழுக்கள் வளர காரணம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: டெங்கு வழக்கமாக வரக்கூடிய மாதங்களுக்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூன் மாதமே தீவிரமாகத் தொடங்கிவிட்டதால் அதன் பாதிப்பு அதிகமாகிவிட்டது. இதற்கு பருவம் தவறி பெய்த பருவமழையும், நல்ல நீரில் உருவாகக்கூடிய டெங்கு கொசுப் புழுக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழல் ஒவ்வொரு வீட்டைச் சுற்றி உருவானதும் முக்கிய காரணம்.

தற்போது வரக்கூடிய எல்லா காய்ச்சலுமே டெங்கு அல்ல. நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றமே டெங்கு பரவலின் தீவிரத்தை அதிகரித்துவிட்டது.

முன்னர் காய்ச்சல் வந்தவுடன் ஒவ்வொரு வீட்டிலும் சுடுகஞ்சியைத்தான் கொடுப்பார்கள். காரணம் உடம்பிலுள்ள நீர்ச்சத்தை ஈடுகட்டும் வல்லமை படைத்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெவ்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

காய்ச்சல் வந்தவுடன் முழு ஓய்வு எடுப்பதோடு, உடம்பில் ஏற்படும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும். அதற்கு உப்பு போட்டு கஞ்சியை அருந்த வேண்டும். இதுபோன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம். நீர்ச்சத்து பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக வீட்டிலேயே குளுகோஸ் ஏற்றுவது போன்ற தவறுகளைச் செய்யக்கூடாது.

புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, தற்போது காய்ச்சல், மர்ம காய்ச்சல், டெங்கு ஆகியவற்றால் இறந்தவர்கள் குறித்து தணிக்கை நடைபெறுகிறது. ஆகையால் அது குறித்து மருத்துவ செயலக அலுவலகம் மூலமாக வெளியாகும். நேர்ந்துவிட்ட இழப்பை ஈடு செய்ய யாராலும் இயலாது. ஆனால் இனி இறப்பு நேராமல் பார்த்துக்கொள்வதற்கான செயல்பாடுகளே முக்கியம்.

தற்போதுதான் இந்த டெங்கு காய்ச்சல் குறித்த முழு பரிமாணத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அதன் காரணமாகத்தான் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு பிரிவினை தொடங்கியிருக்கிறோம். தொடக்க நிலை என்பதால் சற்று தடுமாற்றம் இருந்தது. இனி அடுத்த இரு மாதங்களுக்கும் நிலைமை முற்றிலுமாக சீரடைந்துவிடும். பதினைந்து நாட்களுக்குள் காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது நமது இலக்காக இருந்தாலும், கொஞ்சம் பொறுத்திருந்துதான் அந்த நிலைமையை நோக்கி நாம் நகர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எண்ணிக்கை குறையும்

மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டியன் கூறுகையில், இன்று மட்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 602 பேர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700-க்கும் மேல் காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

‘டெங்கு’வுக்கு தட்டணுக்கள் ஏற்றினால் போதுமா?

மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ மேலும் கூறியது: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தட்டணுக்கள் ஏற்றினால் போதும் என்பது போன்ற மனநிலை உள்ளது. இது மிகத் தவறானது. இது பல நேரங்களில் எதிர்விளைவை உண்டாக்கும். டெங்குவுக்கு அது மட்டுமே தீர்வல்ல என்பதை பொதுமக்களும் சில தனியார் மருத்துவமனைகளும் உணர வேண்டும். வீடுகளைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு மழைநீரோ வேறு நல்ல தண்ணீரோ தேங்காத அளவிற்கு சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இது கொசுப்புழுக்களின் உற்பத்தியைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். இதனை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்வது அவசியம். டெங்கு ஒழிக்க அரசு நினைத்தால் மட்டும் போதாது மக்களும் அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.