பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

நிதியுதவியை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களை ஏமாற்றி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குரம் தஸ்தகிர் கான் கூறியதாக அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி:
ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு உதவி, புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானை குறைகூறும் அமெரிக்காவுடன், கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவிற்கு வழங்கி வந்த மிகப்பெரிய ஒத்துழைப்பை நாங்கள் நிறுத்திவிட்டோம்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதி முக்கியமில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதில், பாகிஸ்தானை குறை சொல்லும் முன்னர் அங்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளை அமெரிக்கா கவனிக்க வேண்டும். இவ்வாறு மீடியாக்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.