பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் -ராகுல்காந்தி

மேற்கு ஒடிசாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறோம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மக்கள் பலனடைந்தனர். ஆனால் அதைக் காட்டிலும் பெரிய நன்மை குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தின் மூலம் கிடைக்கும். 5 முதல் 6 மாதங்களுக்கு அனைத்து ஏழைகளுக்கும் இந்த வருமானம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது.

பிரதமர் மோடி, ஒரு விவசாயி குடும்பத்துக்கு 17 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும். இப்பணம் தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

பாஜகவால் 15 தொழிலதிபர்களின் ரூ.3,50,000 கோடி லோனைத் தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்குக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும். ஒவ்வொரு ஏழைக் குடிமகனையும் நாங்கள் காப்பாற்றுவோம்.

உங்களுக்கு தைரியம் இருந்தால், நாங்கள் செய்வதைத் தடுத்துப் பாருங்கள். ஒட்டுமொத்த இந்தியாவே உங்களுக்கு எதிராக நிற்கும். நகைச்சுவைக்கும் வஞ்சகத்துக்குமான காலம் முடிந்துவிட்டது. குறைந்தபட்ச வருமானத்துக்கான நேரம் தொடங்கிவிட்டது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிரதமர் மோடியும் ஊழலையே பரிசாக அளித்துள்ளனர். பட்நாயக் சீட்டுப்பண ஊழலையும், மோடி ரபேல் ஊழலையும் மேற்கொண்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் விஜய் மல்லையாவுக்கும் நீரவ் மோடிக்கும் வழங்கப்பட்டது.

தொழிலதிபர்களின் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கு மட்டும் பாஜக அரசிடம் போதுமான நிதி உள்ளது. விவசாயக் கடன்களை ரத்து செய்யாத பாஜக அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடியைக் கொடுக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அதே பணம் ஏழைகளுக்குத் திரும்ப வழங்கப்படும்” என்று கூறினார்.