‘பாகுபலி-2’ தமிழில் வெளியாகுமா..? ரணகள கோபத்தில் ராஜமெளலி

பாகுபலி’ முதல்பாகத்தின் வெற்றி ராஜமெளலியை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைத்து இருப்பதால் பாகுபலி இரண்டாகம் பாகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார். முதல் பாகத்தில் மலைகளுக்கும், மேகத்துக்கும் நடுவில் மிதக்கும் தேவதையாக தமன்னா நடித்து நம்மையும், பிரபாஸையும் ஒருசேர கவர்ந்தார். இரண்டாவதில் தமன்னாவுக்கு தம்மாத்தூண்டு வேடம், அனுஷ்காவுக்கு முழுநீள கேரக்டர். அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும்தான் அந்தளவுக்கு அங்கே வெளியான ‘பாகுபலி’ பணத்தையும், பெயரையும், புகழையும் ஈட்டி இருக்கிறது.

முதல் பாகத்தின் தமிழ் மொழியின் உரிமை, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் உரிமையை ஆந்திராவில் பிரபாஸின் நண்பரும், சினிமா புள்ளியுமான ஒருவரிடம் கொடுத்தனர். அப்போது இங்குள்ள பச்சை நிறுவன தயாரிப்பாளர் ஹைதராபாத் சென்று ‘பாகுபலி’ வெளியீட்டில் தன்னையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார். பிரபாஸின் நண்பர் தமிழ் ரிலீஸின் முழுப்பொறுப்பையும் பச்சை நிறுவனத்திடம் தாரை வார்த்தார். தமிழ்நாட்டின் வெளியீடு, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் என்று மொத்தத்துக்கும் 20 கோடிக்கு பேரம்பேசி விலைக்கு வாங்கினர். பச்சை நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யும் பொறுப்பை இனிப்பான சினிமா கம்பெனியின் வசம் ஒப்படைத்தது.

‘பாகுபலி’ முதல்பாகம் தமிழ் நாட்டில் வெளியீடு, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் என்று அனைத்துக்கும் சேர்த்து 39 கோடிகள் வசூல் செய்தது. ‘பாகுபலி’ தயாரிப்பாளரான ராகவேந்திராவிடம் மொத்தம் 23 கோடி மட்டுமே வசூலானது என்று சொல்லப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகள் ‘பாகுபலி’ தமிழ் பதிப்பில் வெளியான வசூல் தொகையை புள்ளிவிவரத்துடன் எடுத்துச் சொல்ல ராஜமெளலியும், ராகவேந்திரராவும் உஷ்ணத்தில் உக்ரமாகி விட்டார்களாம்.

ஏப்ரலில் வெளியாக திட்டமிட்டுள்ள ‘பாகுபலி-2’ தமிழ் பதிப்பின் விநியோக உரிமையை தமிழ்நாட்டில் யாருக்கு தருகிறீர்களோ… இல்லையோ கண்டிப்பாக பச்சை நிறுவனத்துக்கும், இனிப்பான நிறுவனத்துக்கும் தரவேகூடாது என்று தயாரிப்பும், டைரக்‌ஷனும் சேர்ந்து கடுமையான உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். ஏற்கெனவே ‘பாகுபலி-1’ படத்தில் வசூலான உண்மைத் தொகையை மறைத்து, பொய்யுரைத்ததால் அந்த இரண்டு நிறுவனத்தின் மேல் ஏடாகூட கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் அக்கட பூகிக்காரர்கள்.