பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார்.

இது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் பாகிஸ்தான் செல்ல மாட்டேன்.

அங்கு ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்படுகின்றனர். எனது சகோதரர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். ஏராளமான ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைய விரும்புகின்றனர். குருத்வாராக்கள் மோசமாக உள்ளன. சிறுபான்மையினருக்கு மரியாதை இல்லை. கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இம்ரான் கான் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
2016 ல், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த சர்தார் சோரன் சிங் என்பவரை கொலை செய்ததாக, பல்தேவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.