பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது மூக்கை வெட்ட வேண்டுமா?

இந்தியாவின் காஷ்மீரி மாநிலத்தின் புல்வாமா பகுதியில் மத்திய றிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலியெடுத்த படுமோசமான தற்கொலைக்குண்டு தாக்குதலையடுத்து இந்தியா பெரும்பதற்றமடைந்திருப்பதுடன் வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே சகலரிடமும் இருப்பதையும் விளங்கிக்கொள்ளமுடியும். பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்காக பாகிஸ்தானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பதென்பது குறித்து இந்திய அரசாங்கம் யோசித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானுடன் எஞ்சியிருக்கும் சொற்பமான விளையாட்டுத்துறை உறவுகளையும் கூட துண்டித்துவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கு நச்சுத்தனமான பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஒரு சில தொலைக்காட்சி சேவைகள் திட்டமிட்டவகையில் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்திய – பாகிஸ்தான் முரண்நிலை தீவிரமடைகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருநாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை உறவுகள் குறிப்பாக, கிரிக்கெட் உறவுகளே முதலில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தியா இருதரப்பு கிரிக்கெட் போட்டித்தொடர் ஒன்றை பாகிஸ்தானுடன் இறுதியாக 2012 ஆம் ஆண்டில் விளையாடியது. இந்திய பிறிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் விளையாடுவதற்கு பாகிஸதான் கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படுவதில்லை.
எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா பகிஷ்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது மும்முரமாகக் கிளம்பியிருக்கின்றன. இதற்கு மாறான கருத்தை தெரிவிக்கின்ற எந்த ஒருவரும் உடனடியாகவே ” தேசவிரோதிகள்” என்று வர்ணிக்கப்படுகிறார்கள். புகழ்பூத்த கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கரும் சச்சின் ரெண்டுல்காரும் கூட ” பகிஸ்கரிப்பு படையணியின் ” வசைமாரியில் இருந்து தப்பமுடியவில்லை.

பாகிஸ்தானுக்கு வேதனையைக் கொடுக்கவேண்டும் என்பதே அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடமறுப்பதன் பின்னணியில் இருக்கக்கூடிய நோக்கமாக இருந்தால், அந்தக் கோரிக்கையின் ஆதரவாளர்கள் தங்களுக்கு தாங்களே அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளை விளையாடுவதில்லை என்று முன்னர் இந்தியா எடுத்த தீர்மானம் பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் நோக்கம் சாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ( ஐ.சி.சி.)நிகழ்வொன்றில் ஒரு போட்டியைப் பகிஷ்கரிப்பதென்பது சிக்கலான ஒரு பிரச்சினையாகும். ஐ.சி.சி.யின் தடைவிதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியத்துக்கு அப்பால், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரையில் இந்திய அணியை ஒருபோதுமே தோற்கடித்திராத பாகிஸ்தான் அணிக்கு இரு புள்ளிகளை இந்தியா ” பரிசாக ” கொடுப்பதாகவும் அமையும். பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா மிகவும் பாரியதொரு பொது உறவுகள் அனர்த்தத்தைச் சந்திக்கவும் கூடும். புதுடில்லியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கிண்ண குறிபார்த்துச்சுடும் போட்டியில் பங்குபற்றுவதற்கு இரு பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசா வழங்காதிருக்க இந்தியா எடுத்த தீர்மானம் அத்தகைய அனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. அதாவது இந்த விசா மறுப்பு எதிர்காலத்தில் சர்வதேச நிகழ்வுகளை இந்தியா நடத்துவதற்கான வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகும். மேலும் முக்கியமாக, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அல்லது இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடவேண்டிவந்தால் என்ன ஆகும்?

அரசியல் ரீதியான செய்திகளைச் சொல்வதற்காக விளையாட்டுக்களை பகிஸ்கரிப்பதென்பது ஒன்றும் புதியதல்ல.தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்காக, அந்த நாட்டுக்கெதிரான டேவிஸ் கிண்ண இறுதிப்போட்டியை இந்தியா விட்டுக்கொடுத்தது. அதே போன்றே, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற 1996 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் பாதுகாப்பு நிலைவரங்களைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் அவற்றின் லீக் போட்டிகளை விளையாட மறுத்தன ; 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அரசியல் காரணங்களுக்காக சிம்பாப்வேக்கு பயணம் செய்யமறுத்தன.

தென்னாபிரிக்காவுடன் விளையாட இந்தியா மறுத்தமை அதற்கு ஒரு தார்மீக அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்த அதேவேளை, மற்றைய இரு பகிஷ்கரிப்புச் சந்தர்ப்பங்களும் நிலைவரங்களில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவும் இல்லை, உலகின் கவனத்தை ஈர்க்கவும் இல்லை. புள்ளிகளை விட்டுக்கொடுத்ததன் மூலமாக சுற்றுப்போட்டிகளில் அந்த அணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. இத்தடவை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸதானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும்என்பதற்காக இந்தியா அதன் மூக்கை அறுக்கவேண்டும் என்று விரும்புகின்றோமா?கிறிக்கட்டை விளையாட்டாகப் பாருங்கள். அரசியலுக்கு அதனை அழைத்துச் செல்லாதீர்கள்.