பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து, பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீத மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் கண்டறிந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த தடுப்பூசிகள் 65 நாடுகளுக்கு சப்ளை செய்து வருகிறது. ஏழ்மையில் உள்ள ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், பூட்டான் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, சுமார் 40 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி கவி (GAVI) மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்றும், இது, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில், சுமார் 20 சதவீத மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதனை பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவை செயலாளர் அமீர் அஷ்ரப் கவாஜா உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் பாகிஸ்தான் இருந்து வந்தாலும், கொரோனா தொற்று பரவலை சமாளிக்க இந்தியா முன்வந்துள்ளது பலரது தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.