பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை தொடார்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இலங்கை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்-ல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் தனித்தனியாக வைத்திருக்கிறோம், ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ராணுவ தொப்பிகளை அணிந்து விளையாடியது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஐ.பி.எல் போட்டி பாகிஸ்தானில் காட்டப்படவில்லை என்றால் அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கான மிகப்பெரிய இழப்பாகும். சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் டி- 20 போட்டிகளுக்கான ஸ்பான்சர், நிதியுதவி அனைத்தையும் நிறுத்துவதாக ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.